முதல் வெள்ளிக்கிழமை – 6
இயேசுவின் திருஇருதயத்தின் ஆறாவது கொடை
அவருடைய இரக்கம்
இயேசுவின் திருஇருதயத்திலிருந்து
நிரம்பி வழிகிற இரக்கம் என்னும் அவரது கொடை.
நம்மைப் பார்க்கிற அன்பு அது, நமக்கு நலம் தருகிற பரிவு அது,
அவருடைய கனிவு நம்மை நோக்கியே இருக்கிறது.
இரக்கத்தால் உந்தப்பட்டு தொழுநோயாளரை அவர் தொட்டார் (மாற் 1:41).
பார்வையற்றோர்க்குப் பார்வை தந்தார், முடமானவரை நடக்கச் செய்தார் (மத் 20:34).
அழுவாரோடு அழுதார் (யோவா 11:35)
அருள்நிறைந்த கரங்களால் பசித்தோருக்கு உணவு தந்தார் (மத் 15:32).
சோர்வடைந்தோரின் சுமையை அவருடைய இதயம் அறியும்.
அவர்களை அவர் தம்மிடம் அழைத்தார் (மத் 11:28).
நம் துன்பங்களை ஏற்றுக்கொண்டார், நம் புண்களைச் சுமந்துகொண்டார்.
நாம் வாழ வேண்டும் என்பதற்காக அவர் துயரம் ஏற்றார் (எசா 53:4-5).
அவருடைய இரக்கத்திற்கு எல்லை இல்லை.
வற்றாத ஆறு போல தொடர்ந்து ஓடுகிறது.
உடைந்தோரை நோக்கி அவர் ஓடி வருகிறார்.
பாவிகளை மன்னித்து அவர்களை நிறைவாக்குகிறார் (லூக் 5:31-32).
அவருடைய பார்வை யாரையும் தீர்ப்பிடுவதில்லை,
மாறாக, நலத்தையும் அமைதியையும் நல்குகிறது.
‘போ, இனி பாவம் செய்யாதே!’ என்னும் மென்சொல்லோடு அனுப்புகிறார் (யோவா 8:11).
வீழ்ந்தவரைத் தூக்குகிறார், காணாமற்போனவரைக் கண்டுகொள்கிறார்.
அவருடைய இரக்கத்தை நாம் பெற்றக்கொள்வோம்.
கல்லாகிப் போன நம் இதயங்களை அது உருக்கட்டும்.
அவரிடமிருந்து இரக்கத்தைப் பெறுகிற நாம், அதை மற்றவருக்குக் கொடுப்போம்.
அவருடைய இரக்கமாக இந்த உலகிற்கு நாம் மாறுவோம்.
அருள்திரு தேவதாஸ் பங்கராஜ்
பங்குத்தந்தை

Leave a comment